பிரச்னைகளை தைரியமா சொல்லுங்க! மாணவ, மாணவியருக்கு புதிய திட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 30 نوفمبر 2023

பிரச்னைகளை தைரியமா சொல்லுங்க! மாணவ, மாணவியருக்கு புதிய திட்டம்

பிரச்னைகளை தைரியமா சொல்லுங்க! மாணவ, மாணவியருக்கு புதிய திட்டம்

கோவை : மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் டோல் பிரீ எண் வாயிலாக கமிஷனர், கல்வி குழுவினரை வாரம் தோறும் தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கும் வசதி, விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.இதன் வாயிலாக, பள்ளிகளில் சந்திக்கும் பிரச்னைகள் மட்டுமல்லாமல், பாலியல் தொந்தரவு, மனரீதியான பிரச்னைகளை தெரிவிக்கவும் நல்ல வாய்ப்பு அமையவுள்ளது.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 42 துவக்கப்பள்ளிகள், 11 உயர்நிலை, 14 நடுநிலை மற்றும், 17 மேல்நிலைப் பள்ளிகள் என, 84 மாநகராட்சி பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில், 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயில்கின்றனர்.தவிர 1,400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதால், நடப்பு கல்வியாண்டில், 3,263 மாணவியர், 2,727 மாணவர்கள் என, 5,990 பேர் இப்பள்ளிகளில் கூடுதலாக சேர்க்கை புரிந்துள்ளனர்.அதேசமயம், பள்ளிகளில் அடிப்படை வசதிகள், கட்டமைப்பு, பயிற்றுவிப்பு, ஆசிரியர்கள் அணுகுமுறை உள்ளிட்டவற்றில் இருக்கும் குறைகளை மாணவ, மாணவியர் யாரிடம் கூறுவது என தெரியாமல் அவதிப்படுகின்றனர். இதற்கு தீர்வு காண, வாரம்தோறும் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடந்த, கல்விக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்துக்கு, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமை தாங்கினார். குழு தலைவர் மாலதி முன்னிலை வகித்தார். மாநகராட்சியின், 100 வார்டுகளிலும் உள்ள பூங்காக்களில் பெயின்ட் அடித்தல், குழந்தைகள் விளையாட தேவையான வசதிகளை ஏற்படுத்தித்தரவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கல்விக் குழு தலைவர் மாலதி கூறியதாவது:கோவை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரிடம் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண முடிவு செய்துள்ளோம். இதற்கென, இலவச டோல் பிரீ எண் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மாநகராட்சி கமிஷனர், எங்களது குழுவினர் வாரந்தோறும் புதன் காலை, 7:00 முதல் 8:00 மணி வரை மாணவ, மாணவியரிடம் இருந்து வரும் குறைகளை கேட்டறிந்து, உடனுக்குடன் தீர்வு காண உள்ளோம். குழந்தைகளின் பெற்றோரும் பள்ளி சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம். அடுத்த வாரம் இந்த வசதி துவங்கப்படவுள்ளது. இதற்கான அடிப்படை பணிகள் நடைபெற்று வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.