NCERT பாடப்புத்தகம் - நீட் தேர்வு பயிற்சிக்கு கட்டாயம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 18 يونيو 2023

NCERT பாடப்புத்தகம் - நீட் தேர்வு பயிற்சிக்கு கட்டாயம்!



NCERT பாடப்புத்தகம் - நீட் தேர்வு பயிற்சிக்கு கட்டாயம்! NCERT Textbook - Mandatory for NEET Practice!

'மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி., பாடப் புத்தகத்தை முழுமையாக படித்தால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம்' என, இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' தேர்வின் முடிவு, 13ம் தேதி இரவு வெளியானது. இதில், சென்னை வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவரான, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபஞ்சன், 720 மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார்.

அவரை தொடர்ந்து, சென்னை ஐ.ஐ.டி., வளாக பள்ளியில் படித்த, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கவ்ஸ்டவ் பவுரி என்ற மாணவர், 716 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்றார்.

இவரை, கே.வி., பள்ளி முதல்வர் மாணிக்கசாமி மற்றும் ஆசிரியர்கள், பள்ளிக்கு அழைத்து பாராட்டினர். சென்னை ஆகாஷ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற இவர், தன் வெற்றி குறித்து அளித்த பேட்டி:

சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள, கேந்திரிய வித்யாலயா பள்ளியில், பிளஸ் 2 வரை படித்தேன். என் தந்தை ரஞ்சித் பவுரி, சென்னை ஐ.ஐ.டி.,யில் 'மெட்டலர்ஜிக்கல்' இன்ஜினியரிங் துறை பேராசிரியராக உள்ளார்.

அம்மா சுஷ்மிதா லாயக், தனியார் நிறுவனத்தில் மனிதவள பிரிவு துணை தலைவராக பணியாற்றுகிறார்.

என் பெற்றோர் தான் என் வெற்றிக்கு பெரும் துணையாக இருந்தனர். பள்ளியிலும், பயிற்சி மையத்திலும் சிறப்பான பயிற்சியும் வழிகாட்டுதலும் கிடைத்தன.

என்.சி.இ.ஆர்.டி., என்ற தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பாடப் புத்தகத்தை முழுமையாக படித்தேன்; பயிற்சி மையத்தின் மாதிரி தேர்வுகளை அடிக்கடி எழுதினேன். இரவு நேரங்களில் விழித்து, ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஐந்து மணி நேரம் படித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தைச் சேர்ந்த சூர்ய சித்தார்த் என்ற மாணவர், 715 மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில் ஆறாம் இடம் பெற்றுள்ளார்.

அவர் அளித்த பேட்டி:

என் தந்தை மென்பொருளாளராக உள்ளார். என் அண்ணன், சென்னை ஐ.ஐ.டி.,யில் இன்ஜினியரிங் படிக்கிறார்.

நான் ஆகாஷ் பயிற்சி மையத்தில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான நீட் பயிற்சி வகுப்பில் பங்கேற்றேன். நான் தினமும் பயிற்சி மையத்துக்கு வந்து, மாதிரி தேர்வுகளில் பங்கேற்றேன். கடந்த 10 ஆண்டுகளுக்கான நீட் வினா வங்கியை பயன்படுத்தி, பயிற்சி எடுத்தேன்.

அதேபோல், நீட் தேர்வுக்கு தயாராவோர், என்.சி.இ.ஆர்.டி., புத்த கத்தை முழுமையாக படிக்க வேண்டியது அவசியம். அதை தவிர, வேறு புத்தகங்களில் இருந்து வினாக்கள் வருவதில்லை.

நான் நீட் தேர்வுக்கு பயிற்சி எடுத்து கொண்டாலும், எந்தவித மன அழுத்தமும் இல்லாமல், வேறு பொழுதுபோக்கிலும் கொஞ்சம் நேரம் செலவழித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.