சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்த வேண்டும் - தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 25 مارس 2023

சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்த வேண்டும் - தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்த வேண்டும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம், தூத்துக்குடி மாவட்டம், புதூர் வட்டாரம், நம்பிபுரம் இந்து தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், அவருடன் மற்றுமொரு ஆசிரியர் ஆகிய இருவரும் ஓரிரு தினங்களுக்கு முன்பு, அப்பள்ளியில் படிக்கும் மாணவனின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்களால் தாக்கப்பட்டனர். இச்சம்பவம் ஆசிரியர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல்துறை கைது செய்ததுடன், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கியநபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தியாகும். ஆசிரியர்களின் மனவேதனையை உணர்ந்து உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இது போன்ற விரும்பத் தகாத சம்பவங்கள் அவ்வப்போது ஆசிரியர்களுக்கு நடந்து கொண்டே இருக்கிறது. இதனை முற்றிலும் தீர்த்திடும் வகையில் ஆசிரியர்களை பாதுகாக்கும், ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவது அவசியமான ஒன்றாகும். ஆசிரியர்களின் இக்கோரிக்கை வலியுறுத்தப்படும் வகையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் தூத்துக்குடியில் இன்று (25.03.2023) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆசிரியர்கள் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இச்சட்டத்தின் அவசியத்தையும் உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவசர அவசிய தேவை உணர்ந்து வரும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக தங்களுக்கு வேண்டுகோளாக முன்வைக்கிறோம். இதனை ஏற்று புதிய சட்டம் ஏற்படுத்தித் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.