தேன்சிட்டு’, ‘கனவு ஆசிரியர்’... அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை பட்டைத் தீட்டும் மாத இதழ்கள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 26 مارس 2023

தேன்சிட்டு’, ‘கனவு ஆசிரியர்’... அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை பட்டைத் தீட்டும் மாத இதழ்கள்!

தேன்சிட்டு’, ‘கனவு ஆசிரியர்’... அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை பட்டைத் தீட்டும் மாத இதழ்கள்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ‘தேன்சிட்டு’ என்ற மாதம் இருமுறை இதழும், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்காக ‘கனவு ஆசிரியர்’ என்ற மாத இதழும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்படுகின்றன.

‘கல்வி’, ‘வாழ்க்கை’, ‘சமூகம்’, ‘நலம்’, ‘பொது’ ஆகிய ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு 52 பக்கங்களில் ’கனவு ஆசிரியர்’ மாத இதழ் வெளிவருகிறது. ஒவ்வொரு பிரிவின் கீழ் அது தொடர்பான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. உதாரணத்துக்கு, “பெற்றோர் போலவே குழந்தைகளின் மனதிற்கு நெருக்கமானவர்கள் ஆசிரியர்களே! அவர்களே பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து உதவ முடியும். இதற்காகவே தமிழ்நாடு அரசு சார்பாகப் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் திட்டத்தை குழந்தைத் திருமண முறையைத் தடுக்கும் ஒரு வழிமுறையாகவே பார்க்கிறேன்” என்று ‘ஒன்றிணைந்து தடுப்போம்’ என்கிற கட்டுரையில் குழந்தைகள் நல உரிமைச் செயற்பாட்டாளர் அ.தேவநேயன் குறிப்பிடுகிறார். ’சமூகம்’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த கட்டுரை குழந்தைத் திருமணம் சமுதாயத்தில் ஏற்படுத்தும் பாதிப்பையும், அதிலிருந்து பெண் குழந்தைகளை காக்க தமிழ்நாடு அரசு வகுத்துள்ள ‘குழந்தை நேய தமிழ்நாடு’ என்ற கொள்கை குறித்தும் எடுத்துரைக்கிறது.

குறிப்பாக குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதில் ஆசிரியர்கள் ஆற்ற வேண்டிய பங்களிப்பை விளக்குகிறது. இதை அடுத்து, குழந்தை திருமணம் கூடாது என்பதையும், பெண் பிள்ளைகளுக்குக் கல்வியின் முக்கியத்துவத்தையும் விவரித்து அது தொடர்பாக சமூகத்தில் உரையாடல் நடத்தப்பட வேண்டிய அவசியத்தைச் சுட்டிக்காட்டிய, ‘அயலி’ குறுந்தொடர் குறித்த கட்டுரையை ஆசிரியர் ரெ.சிவா எழுதி உள்ளார். அயலியிலிருந்து அயல்நாட்டுக் கல்வி முறையை அட்டகாசமாக விளக்கும் ‘அமெரிக்காவில் கல்வி: ஒரு வரலாற்றுப் பார்வை’ கட்டுரை விரிகிறது.

அமெரிக்காவில் கற்பிக்கப்படும் கல்வியை அறிமுகப்படுத்தும் அதேவேளையில் கரோனா பெருந்தொற்று காலத்தில் படிப்பில் பின்தங்கிப்போன நம் செல்லப்பிள்ளைகளின் கல்வியை மீட்டெடுக்கத் தன்னார்வலர்கள் துணை கொண்டு முன்னெடுக்கப்படும் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தின் சாராம்சத்தை மற்றொரு கட்டுரை விவரிக்கிறது. வழக்கமான கல்வி முறையில் அறிமுகப்படுத்த வேண்டிய மாற்றங்களை விவாதிக்கும் கட்டுரைகளோடு சிறப்பு குழந்தைகளுக்கான கற்பித்தல் முறையை ‘எல்லோருக்குமான கல்வி’ தொடர் விளக்குகிறது. சிறப்பான அரசு பள்ளிகளையும், அரசு பள்ளி ஆசிரியர்களையும் அடையாளம் கண்டு அவர்களின் ஆகச்சிறந்த பங்களிப்பை கண்கவர் புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களுடன் சொல்லும் பக்கங்களும் உள்ளன. மாணவர் மற்றும் ஆசிரியர்களின் உடல் மற்றும் மன நலம் பேண வழிகாட்டும் பத்திகளும் உள்ளன. சிறப்பாக செயல்படும் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் கல்வி செயற்பாட்டாளர்களின் கை வண்ணத்தில் ‘கனவு ஆசிரியர்’ இதழ் வெளிவருகிறது.

ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள் ரசித்து படித்து பயன்பெறும் வகையில் 24 பக்கங்களில் ‘தேன்சிட்டு’ இதழ் வெளியிடப்படுகிறது. ‘காலாவதி தேதி பார்த்து வாங்குவோம்!’ என்ற சித்திரக்கதை பகுதி நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் கடையில் வாங்கும் முன் அவற்றில் அச்சடிக்கப்பட்டிருக்கும் காலாவதி தேதியை தெரிந்து கொள்ள வேண்டியது அத்தியாவசியம் என்பதை சொல்லித் தருகிறது. போதனையாக அல்லாமல் கதைப்படங்களின் வழியாக இதனை சுவைப்பட இந்த பகுதி கற்பிக்கிறது.
‘பெரியோரின் வாழ்விலே’ எனும் தொடர் சாதனை படைத்த ஆளுமைகள் கடந்து வந்த பாதையை சுருக்கமாக அறிமுகம் செய்கிறது. சிறுவர்கள் எளிமையாக படிக்கக்கூடிய சிறார் நூல்களை ‘நூல் அறிமுகம்’ காட்டுகிறது. தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் வரலாறு, அங்கிருந்து உதித்த பிரபலங்கள், அப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற கட்டுமானங்கள் உள்ளிட்டவற்றை ‘மாவட்டம் அறிவோம்’ எடுத்துக்காட்டுகிறது. இப்படி மாணவர்களின் வாசிப்புத் திறனைத் தூண்டும் வகையில் கதைகள், கட்டுரைகள், வரலாற்றுத் தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் மாணவர்களே எழுதிய கதைகள், தீட்டிய ஓவியங்களையும் உள்ளடக்கி ‘தேன்சிட்டு’ இதழ் வெளிவருகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.