அரசுக்கு எதிராக தொடர் போராட்டம்; ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 10 يناير 2023

அரசுக்கு எதிராக தொடர் போராட்டம்; ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு



அரசுக்கு எதிராக தொடர் போராட்டம்; ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு

தி.மு.க., அரசை எதிர்த்து, தொடர் போராட்டங்களை 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துள்ளது.

அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' கோரிக்கைகள், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக இடம் பெற்றன. தேர்தலிலும் தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், தி.மு.க., ஆட்சி வந்ததும், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கோரிக்கைகளை வலியுறுத்தினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட பல கோரிக்கைகள், ஆட்சி அமைந்து ஓராண்டு கடந்தும் நிறைவேற்றப்படவில்லை.

கடந்த ஆண்டு செப்டம்பரில், வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டை நடத்தி, முதல்வர் ஸ்டாலினை கவுரவப்படுத்தினர். அந்த மாநாட்டிலும் கோரிக்கை குறித்து, முதல்வர் அறிவிக்க மறுத்து விட்டார். இதையடுத்து, கடந்த 5ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதற்கும், அரசு தரப்பில் எந்த பதிலும் இல்லாததால், ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அடுத்த திட்டம் குறித்து, 8ம் தேதி மதுரையில் ஆலோசனை நடத்தினர். இதில் பங்கேற்ற சங்க நிர்வாகிகள், 'ஜாக்டோ - ஜியோவின் எழுச்சியை மீண்டும் காட்டாவிட்டால், தி.மு.க., ஆட்சியில் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியாது' என, பேசினர்.

இதையடுத்து, தொடர் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மார்ச் 5ம் தேதி மாநிலம் முழுதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது. அதற்கு முன், பிப்., 12ல் மாவட்ட அளவில் போராட்ட ஆயத்த மாநாடு நடத்தப்படுகிறது.

இதன் பின்னும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மார்ச் 24ல் மனித சங்கிலியும், அதன்பின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.