சூழலுக்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றம்: கவர்னர் ரவி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 25, 2022

சூழலுக்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றம்: கவர்னர் ரவி

கல்வி முறையில் மாற்றம்

நாடு வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.

ஊட்டி ராஜ்பவனில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கான மாநாடு நடந்தது. இதன் இரு நாள் கருத்தரங்கை கவர்னர் ஆர்.என்.ரவி துவக்கி வைத்து பேசியதாவது:

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு பிரச்னைகள் இருந்து வந்தது. ஜம்மு - காஷ்மீரில் பிரிவினைவாத சக்திகளால் பல்வேறு பிரச்னைகள் இருந்து வந்தது. தற்போது அங்கு அமைதி திரும்பியுள்ளது. ஏராளமான சுற்றுலா பயணிகள் ஜம்மு-காஷ்மீருக்கு சுதந்திரமாக வந்து செல்ல துவங்கியுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வட கிழக்கு மாநிலங்களில் பல்வேறு பிரச்னைகள் இருந்து வந்தது. குறிப்பாக, நக்சல் பிரச்னைகள் அதிகமாக இருந்தது. ஆனால், அரசின் துரித நடவடிக்கையால் நக்சல் பிரச்னை வெகுவாக குறைந்துள்ளது. நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நாட்டை துண்டாடும் சக்திகளுக்கு அரசிடம் கருணை கிடையாது. இது துல்லிய தாக்குதலின் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது. இங்கு சமூகத்தில் எந்த வித ஏற்றத் தாழ்வுகளும் கிடையாது. அனைத்து குடிமக்களும் அமைதியாக வாழ இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 70 சதவீதம் மாணவர்கள்

இந்தியாவில் சுதந்திரத்திற்கு முந்தைய கல்வி முறை அப்போதைய சூழலுக்கு ஏற்றவாறு இருந்தது. நாடு வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இந்தியா வரும் 2047ல் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்க கல்வி முறைகளில் மாற்றங்கள் தேவை. அதற்கான திட்டமிடுதலில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஈடுபட வேண்டும். கடந்த, 10 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

நம்மை அச்சுறுத்தி வந்த நாடுகள் கூட தற்போது நம்மைக் கண்டு அஞ்சும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு உதாரணம், உக்ரைன் - ரஷ்யா போரில் எந்த நாட்டிற்கும் இந்தியா அடிபணியாமல் சுதந்திரமான முடிவை எடுத்தது. இந்திய அளவில் 70 சதவீதம் மாணவர்கள் கலை அறிவியல் பாடங்களையே படித்து வருகின்றனர்.

மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து வெளிவரும்போது திறமையானவர்களாக இருக்க வேண்டும். மாணவர்களிடத்தில் பன்முக திறமையை உருவாக்க பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பாடுபட வேண்டும். இந்தியாவை முதன்மை நாடாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பல்கலைக்கழகங்கள் பன்முக திறன் கொண்ட மாணவர்களை உருவாக்குவது கடமை. அதற்கான வாய்ப்புகளை பல்கலைக்கழகங்கள் கட்டமைக்க வேண்டும். இவ்வாறு, கவர்னர் ரவி பேசினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.