விவரங்களை திரித்து மாணவர்களின் சாதியை கேட்டதாக கூறுவது பொய் தமிழக அரசின் சமூக நீதி கொள்கைக்கு முரணானது: பள்ளிக் கல்வித்துறை விளக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 13 مارس 2022

விவரங்களை திரித்து மாணவர்களின் சாதியை கேட்டதாக கூறுவது பொய் தமிழக அரசின் சமூக நீதி கொள்கைக்கு முரணானது: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

சென்னை: விளிம்பு நிலையில் உள்ளவர்களின் முன்னேற்றத்திற்கென கேட்கப்படும் விவரங்களை திரித்து மாணவர்களின் சாதியை பள்ளிக்கல்வித்துறை கேட்டது போன்றதொரு தோற்றத்தை தர முயல்வது அநீதியானது, முற்றிலும் பொய்யானது தமிழக அரசின் சமூக நீதி கொள்கைக்கு முரணானதுமாகும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை அடிப்படையாக வைத்து நாளிதழ் ஒன்றில் உண்மைக்குப் புறம்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறித்த விவர பதிவேட்டில் அவர்களின் சாதி குறித்த கேள்வி கேட்கப்பட்டு உள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி சட்டம் நடைமுறைக்கு வந்தது முதலே ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை வகுத்தபின் அது குறித்து பள்ளிக் கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே பள்ளி மேலான்மைக் குழுக்களுக்கான நிதி வழங்கப்படும். 2020-21ம் கல்வி ஆண்டில் பள்ளி மேம்பாட்டு திட்டம் வகுக்கப்பட்டது குறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு தகவல் அனுப்பாத பள்ளிகளை விரைந்து அனுப்ப வேண்டும் என்று கோரி பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த சுற்றறிக்கையில் குழந்தைகள் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்களா, பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்களா, பிற்படுத்தப்பட்ட அல்லது மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களா அல்லது சிறுபான்மையினரா அல்லது முற்பட்ட வகுப்பினரா என்று மட்டுமே கேட்கப்பட்டிருக்கிறது. ஒரு குழந்தையின் சாதியை கேட்பதற்கும் அக்குழந்தை சார்ந்த வகுப்பை கேட்பதற்கும் வேறுபாடு உள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் என்ன வகுப்பைச் சார்ந்தவர்கள் என்ற தகவல் ஏற்கனவே இருக்கிறது. இது வெகு காலமாக பின்பற்றப்படும் நடைமுறை ஆகும். இந்நிலையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இதை மிக எளிதாக பதிவேற்றம் செய்து விட முடியும். இதன் மூலம் பணி சுமை குறைகிறது, ஒரு மாணவர் பள்ளியில் சேரும் போது ஒரு முறை பதிவு செய்தால் போதும் இவர்கள் சார்ந்த வகுப்பு தான் செயலியில் பதிவாகுமே தவிர மாணவர்களின் சாதி எங்குமே சேமிக்கப்படுவதில்லை.

விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை உட்பட பல்வேறு சிறப்பு திட்டங்களுக்கான பயன்கள் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த தகவல் கேட்கப்படுகிறது. பின்னாளில் அவர்கள் இட ஒதுக்கீடு மூலம் பலன் பெறவும் இந்த அடிப்படை தகவல் தேவைப்படுகிறது. ஒரு மாணவர் எந்த வகுப்பைச் சார்ந்தவர் என்பது தான் தமிழக அரசுக்கு தேவையே தவிர அந்த மாணவரின் சாதி அல்ல. சமூக நீதியின் அடிப்படையில் இயங்கும் தமிழக அரசு தன் நோக்கத்தில் தெளிவாக இருக்கிறது. அந்த சுற்றறிக்கையில் சாதி கேட்கப்படாத போது கேட்டதாக ஒரு பொய் செய்தியை உலவ விடுவது உண்மைக்குப் புறம்பானது, சாதிக்கும் வகுப்புக்கும் வேறுபாடு தெரியாமல் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகப் பள்ளிகளில் சாதிய பாகுபாடு காட்டப்படுகிறது என்கிற தகவல் தெரிந்தால் உடனே நடவடிக்கை எடுத்திருக்கிறது. விளிம்பு நிலையில் உள்ளவர்களின் முன்னேற்றத்திற்கென கேட்கப்படும் விவரங்களை திரித்து மாணவர்களின் சாதியை பள்ளிக்கல்வித்துறை கேட்டது போன்றதொரு தோற்றத்தை தர முயல்வது அநீதியானதும் முற்றிலும் பொய்யானது தமிழக அரசின் சமூக நீதி கொள்கைக்கு முரணானதுமாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.